பருவநிலை பாதிப்பு, கப்பல் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், உலக சந்தையில் அரிசி, சர்க்கரை, பருத்தி, பருப்பு உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன.
உலக அளவில் நிலவும் பருவநிலை மாற்றங்கள், பயிர் உற்பத்தி சரிவு, மேற்காசியாவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், செங்கடல், ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சரக்குப் போக்குவரத்தில் ஏற்படும் பாதிப்புகள், கப்பல் கட்டண உயர்வு ஆகியவை பல்வேறு வேளாண் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
சர்வதேச சந்தையில் அரிசி விலை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகளாவிய அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 2.4% குறையக்கூடும் என ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பான எஃப்.ஏ.ஓ. (FAO) கணித்துள்ளது.
இந்தியாவில் அரிசி உற்பத்தி கடந்த ஆண்டின் 15.40 கோடி டன்னிலிருந்து, நடப்பு ஆண்டில் 14.40 கோடி டன்னாகக் குறைய வாய்ப்புள்ளது. இது சுமார் 6.50% சரிவாகும். மேலும், கன்டெய்னர் போக்குவரத்துக் கட்டணம் 5,000 டாலரிலிருந்து 55,000 டாலர் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் அரிசியின், எதிர்கால ஒப்பந்த விலைகள் 30 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
சர்க்கரை உற்பத்தி சரியும்
சர்க்கரை சந்தையிலும் விலை உயர்வு தீவிரமடைந்துள்ளது. பிரேசில், இந்தியா, தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட முக்கிய உற்பத்திப் பகுதிகளில் மோசமான வானிலையால் உற்பத்தி 10 முதல் 20 சதவீதம் வரை குறையக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனில் சர்க்கரை உற்பத்தி 19 சதவீதமும், தாய்லாந்தில் 17 சதவீதமும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 14 சதவீதம் சரிந்து 2.95 கோடி டன்னாக இருக்கலாம் என அமெரிக்க வேளாண்மைத் துறை கணித்துள்ளது.
நடப்பு பருவத்தில் உலகளவில் 30 லட்சம் முதல் 35 லட்சம் டன் வரை சர்க்கரைப் பற்றாக்குறை ஏற்படலாம். அக்டோபரில் மட்டும் சர்க்கரை எதிர்கால வர்த்தக விலை சுமார் 8 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூலை மாதக் குறைந்தபட்ச நிலையிலிருந்து விலை சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
பருத்தி விலை இரண்டு மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. உலகளாவிய பருத்தி உற்பத்தி நடப்பு ஆண்டில் சுமார் 2.58 கோடி டன்னாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பருத்தி விலை 25 சதவீதமும் உயர்ந்துள்ளது. ரப்பர் விலை 44 சதவீதம் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, உயிரி எரிபொருள் உற்பத்திக்கான தேவையை அதிகரித்துள்ளது. உலகளவில் உற்பத்தியாகும் தாவர எண்ணெயில் 27 சதவீதம் உயிரி எரிபொருள் தயாரிப்புக்குத் திருப்பிவிடப்படுகிறது. இதனால் உயிரி எரிபொருளுக்கான தாவர எண்ணெய் பயன்பாடு 30 முதல் 32 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என அமெரிக்க வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக சோயாபீன் மற்றும் சோயா எண்ணெய் விலைகள் 20 முதல் 40 சதவீதம் வரையும், கடுகு எண்ணெய் விலை 23 சதவீதம் வரையும் உயர்ந்துள்ளன.
பருப்பு வகைகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கொண்டைக்கடலை விலை 23 சதவீதம், உளுந்து 24 சதவீதம், பட்டாணி 47 சதவீதம் அதிகரித்துள்ளன. இறக்குமதி வரி உயர்வும் இந்த விலை மாற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதர தானியங்களில் பார்லி விலை 44சதவீதம் உயர்ந்துள்ளது. மக்காச்சோளம் விலை 9 சதவீதம் அதிகரித்துள்ளது. தேயிலை விலையும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்
உணவுப் பொருட்கள் முதல் தொழில்துறை மூலப்பொருட்கள் வரை பல்வேறு வேளாண் பொருட்களின் விலைகள் ஒரே நேரத்தில் உயர்வது உலகளாவிய பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் சவாலை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்திச் சரிவு நீடிப்பதுடன், போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்து வருவது, உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாட நுகர்வுப் பொருட்களின் விலைகளில் மேலும் அழுத்தம் ஏற்படக்கூடும்.